துபாயில் திரையிடப்பட்ட கடல் கடந்த பறவைகள் - ஆவணப்படம்

ஆண்டாண்டு காலமாக இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை வளர்த்துக்கொள்ள அயல்நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் என்ன? வாழ்வாதாரத்தை பெருக்க வந்தவர்கள் தங்கள் ஆயள் முழுவதையும் அங்கேயே கழிக்கக்கூடிய அவலம் ஏன் ஏற்படுகிறது? அவர்களுடைய வாழ்க்கையை வசந்தமாக்க செய்யவேண்டியது என்ன? என்பதைக் குறித்து விளக்கும் கடல் கடந்த பறவைகள் எனும் ஆவணப்படம் துபாயிலுள்ள பட்ஸ் பப்ளிக் பள்ளியில் 20.03.2015, வெள்ளிக்கிழமை இரவு 08 மணிக்கு திரையிடப்பட்டது.

அயல்நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் கண்ணீர் மிகுந்த நேர்காணல்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துரைகள், நேர்த்தியான காட்சியமைப்புகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைந்துள்ள இந்த ஆவணப்படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டினார். சமூக ஆர்வலர் இஸ்மத் இனூன், ஊடகவியளாலர் கொள்ளுமேடு ரிபாயி, மருத்துவர் அப்துல் ஹமீது, கல்வியாளர் கலிபுல்லாஹ், சங்கமம் டிவியின் இயக்குநர் கலையன்பன் ஆகியோர் ஆவணப்படத்தைக் குறித்து கருத்துரையாற்றினார்.

ஏ.எஸ். இபுராஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சாதிக் அக்மல் வரவேற்புரையாற்றினார். ஆவணப்படத்தை உருவாக்கிய விதம் அதன் அவசியத்தைக் குறித்து கடல் கடந்த பறவைகள் ஆவணப்படத்தில் கருத்தாக்கம் வழங்கிய ஹூசைன் பாஷா எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளையும், அல் அமான் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து செய்திருந்தது.

துபாயில் நடைபெற்ற அகமும்..புறமும்..சிறப்பு பயிற்சி முகாம்

மார்ச் 20ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் முஹைஸ்னா பகுதியில் உள்ள பட்ஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்-பெண் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கும் முறைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியாக இறைவன் நமக்கு வழங்கியுள்ள கடமைகள் மற்றும் உரிமைகளை அறிதல், வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறைகள் ஆகியவைக் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

 

பெண் பொறியாளர் ஷாமிலா அவர்களின் தயாரிப்பில் உருவான இந்த நிகழ்ச்சியின் பாடத்திட்டங்களை, மனநல ஆலோசகர் ஹூஸைன் பாஷா அவர்கள் இந்த முகாமில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் எளிதில் புரியும் சிறப்பாக பயிற்சியளித்தார். கணவன்-மனைவிக்கிடையே பரஸ்பர அன்பை வளர்க்கவும், அதிகரித்துவரும் விவாகரத்துகளை குறைக்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், மேலும் இந்நிகழ்ச்சியை பல்வேறு இடங்களிலும் நடத்தவேண்டும் எனவும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை நிர்வாகிகளும், அல் அமான் இண்டர்நேஷனல் நிறுவனத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.