விஸ்வரூபம்: தடை நீங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு இழுக்கா?

ஒற்றுமையே ஒரு சமூகத்தின் அத்திவாரம், ஜனநாயகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

மனித உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதும் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியதுமான விடயமாகும். இஸ்லாம் இதை வலியுறுத்திப் போதித்திருக்கிறது, அண்ணலாரின் வாழ்க்கை முறை அதை நமக்கு மிக அழகாக எடுத்தியம்பியிருக்கிறது.

இக்கட்டான கால கட்டங்களை மனித உயிர், உடமைகளின் சேதங்களில்லாமல் எவ்வாறெல்லாம் அண்ணலார் சமாளித்தார் என்பது மாத்திரமன்றி சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கூட எந்த அளவு பேணிப்பாதுகாத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் ஏறத்தாழ அறிந்த விடயமே.

தென்னிந்தியாவில் தயாராகும் தமிழ் சினிமாக்களில் பெரும்பாலும் தீவிர வாதிகள் இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டவர்களாகவே வரும் வரை அதை ஒரு பொருட்டாக எடுக்காத முஸ்லிம சமூகம் (உலக சினிமாவும் அதைத்தான் செய்கிறது) ஒரு சமூகத்தின் வாழ்வியலை தவறான முறையில் சித்தரிக்கச் சென்றதாகக் கூறப்படும் விஸ்வரூபம் எனும் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரியிருக்கிறது.

பேச்சு சுதந்திரத்தின் எல்லைகளுக்கு அப்பால் குறிப்பிட்ட ஒரு சமூகம் மீதான தவறான பார்வையை ஏற்படுத்துவதன் மூலம் அச்சமூகத்தின் மீதான நம்பிக்கை மற்றும் கெளரவத்துக்கும் பங்கம் விளைவிக்க முடியும் என்பதற்கு உலகில் கடந்த காலங்களிலும் பல உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். அது மாத்திரமன்றி, சினிமா எனும் ஊடகத்தின் தாக்கம் நவீன உலகில் வலுவாக இருப்பதனால் அங்கு சொல்லப்படும் ஒவ்வொரு சேதியும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டே ஆக வேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதைப் பார்வையிட்ட முஸ்லிம் தலைவர்கள் இது முற்று முழுதாக இஸ்லாத்தையும் இஸ்லாமிய சமூகத்தையும் திருமறையையும் தவறான முறையில் சித்தரிக்கிறது எனும் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்கள், எனினும் முஸ்லிம் சமூகத்தின் அபிமானி தான் எனக் கூறும் அதன் தயாரிப்பாளர், பிரதான நடிகர் கமல்ஹாசன் எந்த வகையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் நான் தவறாகச் சித்தரிக்கிறேன் என்று இன்னும் கேள்வி கேட்கிறார்.

இது அவரது அறியாமை, அவரது பார்வையின் கோணம் என்று பல் தரப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய விடயமாக இருக்கலாம். ஆகக்குறைந்தது திரைப்படத்தினைப் பார்வையிட்ட முஸ்லிம் தலைவர்கள் அந்த இடத்திலேயே இது குறித்த தங்கள் அதிருப்தியையும் குறிப்பிட்ட காட்சிகளையும் பற்றிய விளக்கத்தினை "கலந்துரையாடி இருப்பார்கள்" எனும் நம்பிக்கையில், கமலஹாசனுக்கு அதற்கு மேலும் புரியவில்லையா? என்பதே சாதாரண முஸ்லிமின் கேள்வியாக இருக்கிறது. எனவே, அவரும் தன் பேரெதிர்ப்பைக் காட்டுகிறார்.

இப்போது இரு வேறு கருத்துக்கள் உள்ள முரண்பாடான விடயம் என்பதால், இவ்விடயம் நீதி மன்றைச் சென்றடைந்து விட்டது, இனி அங்கு வழங்கப்படுவதே நீதியாகவும், அந்த நீதியில் முரண்பாடிருந்தால் மேன்முறையீடாகவும் இரு தரப்பும் தம் நியாயங்களை வைக்கலாம், அது தான் ஜனநாயகமும் கூட.

திரையரங்குகள் நோக்கிய கண்டனப்பேரணி வரை மனித உரிமைக்குள் அடங்கும் அதே வேளை, வன்முறை விஸ்வரூபம் சித்தரித்ததை நியாயப்படுத்தி விடும் என்பதை முஸ்லிம் சமூகம் மனதிற் கொள்ளல் நலம்.

நம் சமூகம் மீதான தவறான பார்வையைக் கண்டித்துப் பயனில்லாததால் நம் எதிர்ப்பைக் காட்டிவிட்டோம், நடு நிலையாளர்களைப் பொறுத்தவரை இரு சாராரின் வாதங்களின் தாக்கத்தோடு திரைப்படத்தைப் பார்ப்பார்கள், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களோ அவர்கள் எதிர்பார்க்கும் அளவு செய்தியிருந்தால் திருப்தியுடன் வெளி வருவார்கள், நியாயத்தை விரும்புபவர்கள் திரைப்படம் அத்து மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டுவார்கள்.

எது எப்படியோ, திரைப்படம் மூலம் கமலஹாசன் சொல்ல நினைத்ததை விட உக்கிரமான, ஆணித்தரமான செய்தியை முஸ்லிம் சமூகம் சொல்லி விட்டது, எனவே, திரைக் கதையின் நியாயங்கள் இனி நம்பப்படும் விடயங்களாக இல்லாமல் அலசப்படும் விடயமாகவும், வாத விவாதத்திற்கு உட்படப்போகும் விடயமாகவும் இருக்கும். இதற்காகப் பாடு பட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் இது ஒரு வெற்றியே!

எனவே, அதையும் தாண்டி இத்திரைப்படம் மேலும் சில தணிக்கைகளுக்குட்பட்டு வெளி வந்தால் கூட அதை முஸ்லிம்கள் இழுக்காகப் பார்க்கும் தேவையில்லை, ஏனெனில் மீண்டும் தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியாக, கருத்தைக் கருத்தால் தோற்கடிக்க முடியும் என்பதற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை இன்றைய நிலையில் சாட்சியாக இருக்கிறது.

தன் நடிப்பின் மைல் கல் என்று அவர் நினைத்த குணா போன்ற திரைப்படங்கள் இந்திய ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட போது கூட இலங்கையில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடியது, அப்பேற்பட்ட ரசிகர்களையும் சேர்த்தே கமலஹாசன் இழந்திருக்கிறார் எனும் போது ஒரு சமூகத்தின் மீதான பார்வை சொல்லப்படும் போது இன்னும் எவ்வளவு கவனம் எடுக்கப்பட வேண்டும் எனும் செய்தி படைப்பாளிகளையும் சென்றடைந்திருக்கிறது, இதுவும் விஸ்வரூபமெடுத்த முஸ்லிம்களின் வெற்றியே !

எடுத்த எடுப்பில் சுதந்திரம் எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நம்பிக்கொண்டிருந்த பல பேர் இன்று ஆடிப்போயிருக்கிறார்கள், ஆனால் அந்த ஆட்டம் முஸ்லிம் சமூகத்திடம் ஒற்றுமையிருக்கும் வரைதான் என்பது உணரப்பட வேண்டும், ஒற்றுமையுடன் கலந்த ஜனநாயகப் போராட்ட சக்தியாக முஸ்லிம்கள் மாறுவது காலத்தின் கட்டாயம், எனவே பொறுமையுடன் தார்மீகப் பொறுப்புடன் சமூகத்துக்கெதிரான வன்முறையைக் கையாள்வது மாத்திரமன்றி மாற்று சமூகங்கள் இந்த ஒற்றுமையை மெச்சி, நம் நன்னடத்தையைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் வகையிலும் வழி நடத்தப்பட வேண்டும் என்பதும் காலத்தின் தேவை.

இதை உணர்ந்து, இந்தியஇலங்கை முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தைக் கையாள வேண்டும் !

Regards,

H.Jamal Mohamed
Seychelles
Victoria
Mahe, Seychelles
Indian Ocean Island Chapter

No comments:

Post a Comment