நடுநிலை தவறும் புதிய தலைமுறை தொலைக்காட்சி!

ஒளிபரப்புத் துவங்கிய சில மாதங்களிலேயே தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி,
அது கடைப்பிடித்து வந்த நடுநிலையைத் தவற விட்டு விட்டதோ என்ற எண்ணம் எழும் அளவுக்கு அதன் செய்தியாளரின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கை இருக்கிறது.

நேற்று (29.01.2013) இரவு 10 மணிக்கு வெளியான நேரலைச் செய்திகளில், புதிய தலைமுறையின் செய்தியாளர் வெங்கட், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லாஹ்வைத் தொடர்பு கொண்டு விஸ்வரூபம் தடை சம்பந்தமாக உரையாடினார். அப்போது அவர், ஜவாஹிருல்லாஹ்விடம், "அஜ்மல் கசாபைத் தூக்கிலிட்ட பிறகும் உங்களை நாங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கவில்லையா?" என, இந்துத்துவாவின் கைக்கூலி போல ஒரு முறைகேடான வினாவைத் தொடுத்தார்.
ஜவாஹிருல்லாஹ் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டது மே 2011 ஆம் ஆண்டு. கசாப் தூக்கிலிடப்பட்டது இரு மாதங்களுக்கு முன்னர் 2012 நவம்பர் 21 ஆம் நாள். இவ்விரண்டிற்கும் இடையே 18 மாதங்கள் இடைவெளி உள்ளது. அவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, அதாவது மே 2011 க்கு முன்னரே கசாபைத் தூக்கிலிட்டுவிட்டு அரசு மறைத்து வைத்திருந்ததா? நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே கசாபை தூக்கிலிட்டாயிற்றா?
ஒரு செய்தியாளருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்குமா? அப்படியென்றால் வேண்டுமென்றே திசைதிருப்பும் நோக்கோடு விஷமத்தனமாகத்தானே அவர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் தீவிரவாதியாக மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாபையும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லாஹ்வையும் இணைத்துக் கேட்பதன் மூலம் புதிய தலைமுறை தனது பார்வையாளர்களிடம் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தினை முன்வைப்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது. இந்திய ஜனநாயக அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரை, தீவிரவாதச் செயல் புரிந்தோருடன் இணைத்துச் சொல்வதன் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் முஸ்லிமாக இருப்பதால் எங்களின் சந்தேகப்பார்வை உங்கள் மீது இருந்து கொண்டே இருக்கும் எனப் புதிய தலைமுறை நேரடியாகத் தெரிவிக்கிறது.

அதுபோல், விஸ்வரூபம் திரைப்படம் தடை சம்பந்தமாக முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தோர் தலைமை நீதிபதியைச் சந்திக்க அவரது இல்லம் செல்கின்றனர். இதனைச் செய்தியாளர், "முஸ்லிம் அமைப்புகள் தலைமை நீதிபதியின் இல்லம் நோக்கிச் செல்கிறார்கள்" என்று கூறும்போது அவரை இடைமறித்து, செய்தி வாசிப்பவர் "முற்றுகை இடப் போகிறார்களா" எனக் கேட்டுக் கொண்டே இணைப்பினைத் துண்டிக்கிறார்.

இவ்வாறே சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான "பல கோணம்" என்ற நிகழ்ச்சியிலும், விஸ்வரூபம் சம்பந்தமாகத் திரைப்பட இயக்குனர் செல்வமணி கூறிய கருத்திற்கு, ஜவாஹிருல்லாஹ் மறுப்புத் தெரிவிக்கும்போது, ஒலியினை துண்டித்தனர்.

இவ்வாறான செயல்களினால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலை தவறி, ஒரு சார்பாகச் செயல்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்தத் தொலைக்காட்சியின் நிறுவனர் பச்சமுத்து, வரும் தேர்தலில் பீ ஜே பி யுடன் கூட்டு வைக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதனால் பீ ஜே பியைக் குளிர வைக்கும் விதமாகவே அத்தொலைக்காட்சி இப்படி நடுநிலை தவறிச் செயல்படுகிறது என்றே தோன்றுகிறது.

-
முஹம்மது, துபாய்.

Thanks : inneram.com

No comments:

Post a Comment